Saturday, November 28, 2009

Jeevakarunyaam

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம்எது கடவுள் வழிபாடு என்று அறியப்படும்?

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அறியப்படும்.

ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் இலக்கணம் என்ன?

ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயத்தில் பொதுவாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுள் வழிபாடு செய்து வாழ்தல் என்று அறிய வேண்டும்.

ஜீவகாருண்யத்தின் வல்லபம் யாது?

பிற உயிர்களிடத்துப் பசி, கொலை முதலியவற்றுள் எதனால் காருண்யம் தோன்றியதோ அதனால் அவ் உயிர் வருந்தாதபடி அதை நீக்குவதற்கு முயற்சிப்பதே அதன் வல்லபம் என்று அறிய வேண்டும்.

ஆன்ம உருக்கம் என்கின்ற ஜீவகாருண்யத்திற்கு ஆற்றல் என்பது எவ்விடத்து வெளிப்படும்?

பசி, பிணி, கொலை முதலிய தடைகளில் எந்தத் தடைபற்றி ஜீவகாருண்யம் தோன்றியதோ அந்தத் தடையை நிவர்த்தி செய்கின்ற இடத்துத்தான் ஜீவகாருண்யத்திற்கு ஆற்றல் இருந்தது என்று அறிய வேண்டும்.


பசியால் திகைக்கின்ற ஏழை ஜீவர்களிடத்து – நாம செய்யத்தக்கது யாது?

“வெயிலேறிப் போகின்றதே! இனி பசி என்கிற வேதனை வந்து சம்பவிக்குமே! இந்த விதி வசத்திற்கு என்ன செய்வது?” – என்று தேனில் விழுந்த ஈயைப் போல், திகைக்கின்ற ஏழை ஜீவர்களுடைய திகைப்பை – நாம் நீக்க வேண்டும். அப்படி, ஏழை ஜீவர்களுடைய திகைப்பை நீக்குவதே ஜீவகாருண்யம்.

பசி விசாரத்தில் அழுந்திய ஏழை ஜீவர்களிடத்து நாம் செய்யத்தக்கது யாது?

“இருட்டிப் போகின்றதே! இனி, ஆகாரம் குறித்து எங்கே போவோம்? யாரைக் கேட்போம்? என்ன செய்வோம்?” – என்ற விசாரத்தில் அழுந்திய ஏழை ஜீவர்களது விசாரத்தை – நாம் மாற்ற வேண்டும். அப்படி ஏழை ஜீவர்களது விசாரத்தை மாற்றுவதே ஜீவகாருண்யம்.

பசியால் – கண்ணீர் வடிக்கின்ற ஏழை ஜீவர்களிடத்து – நாம் செய்யத்தக்கது யாது?

“நடந்து, நடந்து காலும் சோர்ந்தது; கேட்டுக் கேட்டு வாயும் சோர்ந்தது; நினைத்து நினைத்து மனமும் சோர்ந்தது; இனி இப்பாவி வயிற்றுக்கு என்ன செய்வோம்?” என்று கண்ணீர் வடிக்கின்ற ஏழைகளுக்கு – நாம் ஆகாரம் கொடுத்து கண்ணீரை மாற்ற வேண்டும். அப்படி, ஏழை ஜீவர்களது கண்ணீரை மாற்றுவதே ஜீவகாருண்யம்.

பசியால் – மனம் மறுகுகின்ற மானிகளாகிய ஜீவர்களிடத்து – நாம் செய்யத் தக்கது யாது?

“பகற்போதும் போய்விட்டது; பசியும் வருத்துகின்றது; வேறிங்களில் போக வெட்கம் தடுக்கின்றது; வாய் திறந்து கேட்க மானம் வலிக்கின்றது; வயிறு எரிகின்றது; உயிரை விடுவதற்கும் உபாயம் தெரியவில்லை; இவ் உடம்பை ஏன் எடுத்தோம்?” – என்று மனமும் முகமும் சோர்ந்து, சொல்வதற்கு நா எழாமல், உற்பாத சொப்பனம் கண்ட ஊமையைப் போல் மறுகுகின்ற மானிகளாகிய ஜீவர்களிடத்து – நாம் ஆகாரம் கொடுத்து மானத்தைக் காக்க வேண்டும். அப்படி மானத்தைக் காப்பதே ஜீவகாருண்யம்.

பசியால் – தூக்கம் பிடியாமல் துக்கப்படுகின்ற ஏழை ஜீவர்களுக்கு – நாம் செய்யத்தக்கது யாது?

“நாம், முன் பிறப்பில் – பசித்தவர்கள் பசிக்குறிப்பறிந்து பசியை நீக்கியிருந்தால் இப்பிறப்பில் நமது பசிக்குறிப்பறிந்து பசியை நீக்குவதற்குப் பிறிதொருவர் நேர்வர். அப்போது அப்படி நாம் செய்ததில்லை. இப்போது நமக்கு இப்படிச் செய்வாரும் இல்லை” என்று விவகரித்துக்கொண்டு தூக்கம் பிடியாமல் துக்கப்படுகின்ற ஏழை ஜீவர்களுக்கு – நாம், ஆகாரம் கொடுத்துத் துக்கத்தை நீக்கித் தூக்கம் பிடிக்க வைக்க வேண்டும். அப்படி ஆகாரம் கொடுத்துத் துக்கத்தை நீக்கித் தூக்கம் பிடிக்க வைக்க வேண்டும். அப்படி ஆகாரம் கொடுத்துத் துக்கத்தை நீக்கித் தூக்கம் பிடிக்க வைப்பதே ஜீவகாருண்யம்.

அடிவயிற்றில் கொடிய பசி நெருப்பை வைத்துப்படுக்கத் தொடங்குகின்ற விவேகிகளுக்கு – நாம் செய்யத் தக்கது யாது?

தேகம் முழுதும் நரம்புகள் தோன்றப் பசியினால் இளைத்து உயிரொடுங்கி மூர்ச்சை மூடிய காலத்தும் அயலாரைக் கேட்பது துணியாமல் கடவுளை நினைத்து, நினைத்து – நெருப்பிற்படுத்து – நித்திரை செய்யத் தொடங்குவாரைப்போல் – அடிவயிற்றில் கொடிய பசி நெருப்பை வைத்துப் படுக்கத் தொடங்குகின்ற விவேகிகளுக்கு – நாம், ஆகாரம் கொடுத்து அந்தப் பசி நெருப்பை ஆற்ற வேண்டும். அப்படி, மேற்படி விவேகிகளுக்கு ஆகாரம் கொடுத்து அந்தப் பசி நெருப்பை ஆற்றுவதே ஜீவகாருண்யம்.

பசியால் – கன்னப் புடையில் கைகளை வைத்துக்கொண்டு கண்களில் நீர் கலங்க வருந்துகின்ற ஏழைகளுக்கு – நாம், செய்யத் தக்கது யாது?

“நேற்றுப் பட்டினி கிடந்ததுபோல் இன்றும் பட்டினி கிடப்பது எப்படி? நாம் பாலியவசத்தால் இன்றும் பட்டினி கிடக்கத் துணொவோமாயினும், பட்டினி சகியாத நமது ஏழை மனைவி வயிற்றுக்கு யாது செய்வோம்? இவள் பசியைக் குறிப்பதும் பெரிதல்ல. வார்த்திப திசையால் மிகவும் சோர்ந்த நமது தாய் தந்தைகள் இன்றும் பட்டினி கிடந்தால் இறந்து விடுவார்களே! இதற்கு என்ன செய்வோம்? பசியினால் அழுது அழுது களைத்த நமது புத்திரர்களது சோர்ந்த முகத்தை எப்படிப் பார்ப்போம்?” என்று எண்ணி, எண்ணிக் கொல்லன் உலையில் ஊத மூண்ட நெருப்பைப் போல், பசி நெருப்பும் – பய நெருப்பும் – விசார நெருப்பும் – உள்ளே மூண்டபடி இருக்க கன்னப்புடையில் கைகளை வைத்துக்கொண்டு கண்களில் நீர்கலங்க வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து அவ்வருத்தத்தை மாற்ற வேண்டும். அப்படி மாற்றுவதே ஜீவகாருண்யம்.

பசியால் – துக்கப்படுகின்ற ஊனமுற்ற ஏழைகளுக்கு – நாம் செய்யத்தக்கது யாது?

“கண், கை, கால் முதலிய உறுப்புகளில் குறைவில்லாதவர்களாகி ஆகாரம் சம்பாதிக்கத் தக்க சக்தியுள்ளவர்களும் பசியால் வருந்தி இதோ படுத்திருக்கின்றார்கள். குருடும், செவிடும், ஊமையும், முடமுமாக இருக்கின்ற நமக்கு ஆகாரம் எந்த வழியில் கிடைக்கும்> - பசி எப்படி நீங்கும்?” என்று தனித்தனி நினைத்து, நினைத்து துக்கப்படுகின்ற ஊனமுற்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்துத் துக்கத்தை நீக்க வேண்டும், அப்படி துக்கத்தை நீக்குவதே ஜீவகாருண்யம்.

ஜீவகாருண்யம் செய்யும்போது பேதித்து விசாரிக்கக் கூடாது. ஏன்?

பசியினால் வருந்துகின்றவர்கள் எந்த தேசத்தாராயினும், எந்த சமயத்தாராயினும், எந்த ஜாதியாராயினும், எந்த செய்கையராயினும் – அவர்கள் தேச ஒழுக்கம், சமய ஒழுக்கம், ஜாதி ஒழுக்கம், செய்கை ஒழுக்கம் – முதலானவைகளைப் பேதித்து விசாரிக்கக் கூடாது. ஏனென்றால் எல்லா ஜீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதால் ஜீவகாருண்யம் செய்யும் போது பேதித்து விசாரிக்கக்கூடாது.

ஜீவர்களது பசியை நிவர்த்தி செய்விக்கின்றபோது எதை அறிந்து, எப்படிப் பார்த்து, எப்படி பசியை நிவர்த்தி செய்ய வேண்டும்?

ஜீவர்களது, பசியை நிவர்த்தி செய்விக்கின்றபோது 1) எல்லா ஜீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிய வேண்டும். 2) பொதுவாகப் பார்க்க வேண்டும். 3) அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி, அவர்கள் பசியை நிவர்த்தி செய்ய வேண்டும். அப்படி பசியை நிவர்த்தி செய்விப்பதே ஜீவகாருண்யம்.


ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல்
1. ஞானம்
2.
யோகம்
3. தவம்
4.
விரதம்
5. ஜெபம்
6.
தியானம் – முதலியவைகளைச் செய்கின்றவர்களின் நிலைகள் யாவை?
ஜீவகாருண்யம் இல்லாமல்
1. ஞானம்
2.
யோகம்
3. தவம்
4.
விரதம்
5. ஜெபம்
6.
தியானம் – முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுள் அருளுக்குச் சிறிதும் பாத்திரமாட்டார்கள்.